search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க நகைகள் பறிமுதல்"

    கரூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #LSPolls
    கரூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந்தேதி வெளியானது. அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் ஏராளமான வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி நகைகள், மின் சாதன பொருட்களும் சிக்கியுள்ளன.

    இந்த நிலையில் கரூர் அருகே நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை அய்யர்பங்களா சரோஜினி காலனியில் தனியார் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்கம், வெள்ளி நகைகள் வியாபாரிகள், நகை செய்வோர்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள 13 நகைக்கடைகளில் ஒப்படைப்பதற்காக நகைகளை எடுத்துக்கொண்டு ஆம்னி வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வேனை டிரைவர் கிருபாகரன் ஓட்டிச் சென்றார். மேலும் கூரியர் நிறுவன மேலாளர் மற்றும் துப்பாக்கியுடன் 2 பாதுகாவலர்களும் அந்த வேனில் வந்தனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி பட்டிக்கோட்டை சோதனைச்சாவடி அருகே நள்ளிரவில் அந்த வேன் வந்தபோது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் மறித்தனர். நிலையான ஆய்வுக்குழு அதிகாரி குழந்தைவேலு வேனில் எடுத்து வரப்பட்ட பொருட்கள் குறித்து கேட்டபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

    ஆனால் அதில் பெரும்பாலான நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளுடன் அந்த வேன் இன்று அதிகாலை கரூர் கலெக்டர் அலுவலக வளாத்திற்கு கொண்டு வரப்பட்டது. வேனில் வந்தவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதில் 94 கிலோ 894 கிராம் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது.

    அதன் மதிப்பு ரூ.5 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி வேனில் எடுத்து வரப்பட்ட நகைகளை ஆய்வு செய்து, உரிய ஆவணங்கள் இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும், இல்லையேல் அவை அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கரூரில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #LSPolls

    ×